5000 பக்தர்கள்., 2 நாள் மாநாடு., 3டியில் அறுபடை வீடுகள்.! முருகன் மாநாடு அப்டேட்ஸ்.!
திண்டுக்கல்: தமிழக அறநிலையத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தினங்களில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள, முருகரை பற்றி ஆய்வு கட்டுரைகள் எழுதி அனுப்ப muthamizhmuruganmaanadu2024.com எனும் இணையதளத்தில் பதிவு செய்ய முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், முருகன் மாநாடு பற்றியும், அதற்கான முன்னேற்பாடுகள், ஆய்வு கட்டுரைகள், விருதுகள் பற்றியும் அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறை சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் தலைமையில் இதற்கான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முருகர் மாநாடு சிறப்பு மலர் வெளியிடப்பட உள்ளது.
முருகர் பற்றிய ஆய்வு கட்டுரைகள் வந்துள்ளன. வெளிநாட்டில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள், அண்டை மாநிலத்தில் இருந்து150க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள், தமிழகத்தில் இருந்து 1000க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் ஆகியவை வந்துள்ளன. அந்த ஆய்வு கட்டுரைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு மாநாட்டில் அவை வெளியிட ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டை 5000 முருக பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3டி வடிவில் அறுபடை வீடுகளை கைக்கெட்டும் தூரத்தில் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் முருகர் கண்காட்சி நடைபெற உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு தாங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் உயர்நீதிமன்ற முன்னாள் இந்நாள் நீதிபதிகள், ஆதீனங்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு முருக பெருமான் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
முருகர் மாநாடு ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.00 மணிக்கு நிறைவு பெற்று மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணி வரையில் நடைபெறும். அதே போல ஆகஸ்ட் 25ஆம் தேதியும் நடைபெறும். மாநாட்டில் முருகர் புகழ் பறைசாற்றும் வகையில் கும்மி பாடல், ஆடல் பாடல், கருத்தரங்கம், ஆகியவை நடைபெற உள்ளன . மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசமாக உணவுகள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற ஆன்மிகம் சார்ந்த மாநாட்டில் மிக பெரிய மாநாடு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தான் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறினார்.