அமைச்சர் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல்
Minister Sekarbabu: வடசென்னையில் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல்
வடசென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது, திமுக அமைச்சர் சேகர்பாபு-க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. வடசென்னை எம்.பி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய, பேசின் பிரிஜ் மண்டல அலுவலகம் வந்தனர். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு 7-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. தி.மு.க-வுக்கு 2-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றதால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடையே சேகர்பாபு பேசுகையில், “நானும் எங்களது வேட்பாளரும் மனு தாக்கல் செய்வதற்காக சரியாக மதியம் 12 மணிக்கு சென்றோம். ஆனால் எங்கள் கட்சி தொண்டர், பத்துமணிக்கே காவல்துறை பதிவேற்றில் பதிவு செய்து இருந்தார். இதன்படி எங்கள் வரிசை எண் 2 அவர்களின் வரிசை எண் 7 அதன்படி நாங்கள் உள்ளே வேட்புமனு தாக்கல் செய்ய சென்றசமயம், எங்களுடன் அதிமுகவினர் கும்பலாக வந்துவிட்டு, அவரின் வேட்புமனுவை முதலில் பெறவேண்டும் என்று பிரச்சனை செய்தனர்” என்றார்.
இந்த நிலையில் வேட்புமனு தாக்குலுக்கு சென்றுவிட்டு சேகர்பாபு திரும்பிய போது அவர் கார் மீது அதிமுகவினர், கட்சி கொடிகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து திமுகவினர் காரை சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.