திருவண்ணாமலை மகா தீபம் நடத்தப்படுமா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்!
வெற்றிகரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
திருவண்ணாமலை : வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவியது. குறிப்பாக, வஉசி நகரில் ராஜ்குமார் – மீனா தம்பதி வீட்டின் மீது பாறைகள் உருண்டு வந்து தாக்க, உள்ளே சிக்கிக் கொண்ட 5 குழந்தைகள் உள்பட 7 பேரும் மண்ணில் புதைந்தனர்.
நேற்று 5 பேரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய 2 பேரின் சடலங்கள் 2 நாள்கள் கடும் போராட்டத்திற்கு பின், இன்று மீட்கப்பட்டுள்ளன. மண்ணுக்குள் சிக்கி உடல் துண்டு துண்டாக சிதறி இருந்தது நெஞ்சை கனக்கச் செய்கிறது. துண்டுதுண்டாக அவர்கள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
அடுத்தடுத்த 3 நிலச்சரிவுகளால் தி.மலை அடிவார மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். நேற்றைய தினம், அண்ணாமலை மலையின் தென்கிழக்கு பகுதியில் சுமார் ஆயிரம் அடி அளவிற்கு மழையின் உச்சியில் இருந்து பெரிய மண்சரிவு ஏற்பட்டது. இந்த இடம் வரும் 13ம் தேதி கார்த்திகை தீபம் ஏற்றவுள்ள முகப்பு பகுதி என சொல்லப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் மழை பாதிப்புகள், நிவாரண பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம், மகா தீபம் ஏற்றுவது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “மகா தீபம் ஏற்பாடுகள் குறித்து டிச 6,7-ல் மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தவுள்ளோம். திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சேதம் இருந்தால் உடனடியாக சரிசெய்யப்படும் திட்டமிட்டுள்ளோம்.
“40 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் கூடினாலும் வெற்றிகரமாக தீபத் திருவிழாவை நடத்துவோம். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரிசெய்யப்படும்” என்றார்.