மனநோயாளியின் உளறல் ,அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் -கே.எஸ்.அழகிரி அறிக்கை
இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய நிலையில் , அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில்,இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசினார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.இதனையடுத்து திமுக சார்பில் மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதால் அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதால் ஊடக வெளிச்சமும் கூடுதலாக கிடைக்கிறது. இதில் மயக்கமுற்று கிடக்கிற அவர், ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு அருகதை இல்லாத காரணத்தால் ஒரு மனநோயாளியின் உளறலாகவே அவரது பேச்சு இருந்து வருகிறது.மதநல்லிணக்கத்தை குலைத்து, வன்முறையைத் தூண்டுகிற முறையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு இருப்பதால் உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவேண்டும்.தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவதுதான் ராஜேந்திர பாலாஜியின் நோக்கம் என்றால் அதை முறியடிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயக மதச்சார்ப்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.