அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார் – டிடிவி தினகரன்
திமுகவினர், தமிழில் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். தமிழை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள் என டிடிவி தினகரன் பேச்சு.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், மின் கட்டண உயர்வை கண்டித்து அமமுக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு டிடிவி தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய டிடிவி தினகரன், திமுகவில் திணிக்கப்பட்ட தலைவர் இருப்பதால் தான் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை திமுக கட்சியினர் யாரையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை; பொது வெளியில் மு.க.ஸ்டாலின் புலம்புவதை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.
அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார்; இவர் போகும் கார், வீடு எல்லாம் ஓசி. ஆனால் அகங்காரம், ஆணவத்தால் எஜமானர்களாகிய மக்களை ஓசி என கூறுகிறார். திமுகவினர், தமிழில் வார்த்தை ஜாலம் காட்டுவார்கள். தமிழை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவார்கள்; தற்போது புதிதாக மதத்தை கையில் எடுத்துள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர்களால் எனக்கு தூக்கமில்லை என்கிறார் முதலமைச்சர்; ஜெயலலிதாவால் அமைச்சர்கள் தூக்கமில்லாமல் இருந்தார்கள். மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாது என்ற எம்.ஜி.ஆர் பாடல் வரிகள் போல, தீயசக்திகள் மாறவே மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.