அமலாக்கத்துறை சோதனை.. விசாரணை.! இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு.!

அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணையை தொடர்ந்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார்.
நேற்று முன்தினம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணி தொடர்பான வீடு , அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் அதிகளவு மண் எடுத்ததாகவும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார் தொடர்பாகவும் அமைச்சர் பொன்முடி மீது 2011 அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்குப்பதிவை மையமாக கொண்டு நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி அழைத்து செல்லப்பட்டு நேற்று அதிகாலை 3 மணி அளவில் தான் விசாரணை முடிந்து வீடு திரும்பினார்.மேலும் நேற்று மலை 4 மணி அளவிலும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி விசாரணைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலையிலேயே தனது வழக்கமான அலுவல் பணிகளை அமைச்சர் பொன்முடி ஆரம்பிப்பதற்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் நடந்த இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.