தமிழக உயர்கல்வித்துறையின் புதிய 15 அறிவிப்புகள்.. அமைச்சர் பொன்முடி தகவல்.!

Minister Ponmudi - Tamilnadu Assembly

சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் பற்றிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர். அப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறையில் புதியதாக திட்டமிடப்பட்டுள்ள 15 திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

அவை,  அரசு தொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய நான்கு சிறப்பு பயிலகங்களில் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவகையில் 6 புதிய பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் ஆண்கள் விடுதி கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

14 கோடி ரூபாய் செலவில், ஈரோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் ஆண்கள் விடுதி கட்டப்பட உள்ளது.

21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் சிறப்புப் பயிலக மாணவர்களுக்காக சென்னை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் ஆண்கள் விடுதி கட்டப்படும்.

8.55 கோடி ரூபாய் செலவீட்டில் அனைத்து அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மாணவியர்களுக்கு தனி ஓய்வறைக் கட்டிடம் கட்டப்படும்.

3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கோவை, சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல் ஆய்வகம் நிறுவப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திருநெல்வேலி, தர்மபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகளில் இணைய ஆய்வகம் நிறுவப்படும்.

GATE, IES, CAT உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கூடுதலாக 77 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

7.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.

தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் செயல்படும் தமிழ்நாடு வரலாறு ஆராய்ச்சி மன்றம் மறுஉருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உயர்கல்வித்துறை திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்