அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

ponmudi

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதாவது, சொத்து குவிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டதற்கு பிறகு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும், வழக்கை தானாக முன்வந்து விசாரித்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என கூறி அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுளுக்கு நன்றி எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக பொறுப்பில் இருந்த, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், பின் வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

நடிகர் விஜய் உறுதியாக அரசியலுக்கு வருவார் – சீமான்

போதிய ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்யவில்லை, குற்றசாட்டுகள் நிரூபணம் செய்யவில்லை என கூறி, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி, அவரது மனைவியை வேலூர் நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில், கடந்த ஆக.10ம் தேதி தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இவ்வழக்கு விசாரணையில், சொத்து குவிப்பு வழக்கில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது. இதன் காரணமாகவே வேலூர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளோம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார். அப்போது, அமைச்சர் பொன்முடி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது. ஆனால், வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார்.

இந்த சமயத்தில், சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு தடையில்லை என தெரிவித்து, அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்