தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணிகள்… அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்.!
தமிழகத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பிழைப்புக்காக நகர்ப்பகுதிகளுக்கு சென்று விட கூடாது என நகரங்களுக்கு இணையாக கிராமத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. – அமைச்சர் பெரிய கருப்பன்.
பணிச்சுமை உள்ளிட்ட 10 பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இன்றும் நாளையும் விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 18,000 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நடைபெறும் வேளையில், உள்ளாட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் ஊரக வளர்ச்சிக்கு அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில்,’ கடந்த ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக திறமையின்மையை தற்போது சரிசெய்து வருகிறோம். இப்போது கடந்த 6 மாத காலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறோம்.. எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற கூற்றுப்படி முதல்வரின் செயல்பாடுகள் அமைந்து வருகிறது.
ஒரு சிலரின் வளர்ச்சி மாநில வளர்ச்சியாக மாறாது. அதை மனதை கொண்டு தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் 55 சதவீதத்திற்கும் அதிகமாக மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பிழைப்புக்காக நகர்ப்பகுதிகளுக்கு சென்று விட கூடாது என நகரங்களுக்கு இணையாக கிராமத்தில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கலைஞர் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் அனைத்து சாலைகளும் தார்சாலையாக மாற்றப்பட்டது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சார சேவை கலைஞர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. மேலும், கிராமப்புறங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக தான் கிராமங்கள் தோறும் நீர்த்தேக்க தொட்டி கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டது. என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.