ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!
ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை பற்றி முதலமைச்சரிடம் எடுத்துரைப்பதாக அமைச்சர் மூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக மதுரையில் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரபலம். இதில் ஆயிரக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகளும், அதனை பிடிக்க மாடுபிடி வீரர்களும் களமாடுவர்.
இந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது உயிரை பணயம் வைத்து விளையாடும் வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா என்பது தான். இது பற்றி இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த அமைச்சர் மூர்த்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ” மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் கோரிக்கை குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செலவோம். அவர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள்.” எனக் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு வழங்கப்பட்ட டோக்கன் குறித்த கேள்விகளுக்கு, “தற்போது டோக்கன் யாருக்கும் வழங்கப்படுவதில்லை. எல்லா ஆன்லைன் வழியாக தான் நடக்கிறது. என் பெயரில் மாடு வைத்துக்கொண்டு, எனது உதவியாளர் பெயரில் பதிவு செய்தால் அது ஏற்றுக்கொள்ளாது. ” எனத் தெரிவித்தார்.
மேலும், “அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளையும் சேர்த்து சுமார் 12 ஆயிரம் காளைகள் பதிவு செய்யப்பட்டன. அதில் முதலில் வந்த உரிமையாளர்களுக்கே விவரங்கள் சரிபார்க்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.” எனவும் தெரிவித்தார்.