30 கோடியா.? இபிஎஸ் அரசியல் நாகரீகத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.! அமைச்சர் மூர்த்தி ஆவேசம்.!
அமைச்சர் மூர்த்தி மகன் திருமணத்திற்கு 30 கோடி செலவு செய்தார் என இபிஎஸ் குற்றம் சாட்டியதற்கு அமைச்சர் மூர்த்தி பதில் கருத்தை தெரிவித்து உள்ளார்.
தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமணம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார். சுமார் 50ஆயிரம் பேருக்கு மேல் திருமணத்திற்கு வந்திருந்தனர். அன்று விழாவில் மொய் கவுண்டர்கள் மட்டுமே 50 திறக்கப்பட்டு இருந்தது. இந்த திருமண விழா நிகழ்ச்சி தான் அப்போது பேசுபொருளாக அமைந்தது.
இந்த பிரமாண்ட திருமண நிகழ்ச்சி குறித்து பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ அமைச்சர் மூர்த்தி தன் மகன் திருமணத்திற்கு 30 கோடி செலவு செய்தார் என குற்றம் சாட்டினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மூர்த்தி, ‘ என் மகன் திருமணத்திற்கு 50 ஆயிரம் பேர் வந்திருந்தனர். ஒரு ஆளுக்கு அதிகபட்சம் 300 என்று வைத்தாலும், 1.5 கோடி தான் ஆயிருக்கும். வாழை தோரணம் என செலவுகளை சேர்த்தால் 3 கோடி செலவு செய்து இருப்பேன். நாகரீகம் கருதி அரசியல் செய்ய வேண்டும். சாப்பாடு விஷயத்திலா அரசியல் செய்வது.? அரசியல் நாகரீகம் கருதி தான் நாங்கள் எதுவும் பேசாமல் இருக்கிறோம். அவர் எப்படி முதல்வராக மாறினார் என தெரியாதா.? பொதுச்செயலாளர் ஆவதற்கு எத்தனை லட்சம் கோடி செலவு செய்தார் தெரியுமா? ‘ என பேசிவிட்டு இபிஎஸ் கூறிய கருத்துக்கு பதில் அளித்து சென்றார்.