இது நடக்காவிட்டால் ராஜினாமா தான்..! அமைச்சர் மூர்த்தி சபதம்
Minister Moorthi: தங்கதமிழ்ச்செல்வனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வைக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என என அமைச்சர் மூர்த்தி பேச்சு
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது, இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் அறிமுக கூட்டம் பத்திரபதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மூர்த்தி, “தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும், 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்செல்வன் வெற்றி பெறாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்வேன், அவர் உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும்.
கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் அப்போது உழைத்ததால் நான் தற்போது அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளேன். எனவே கட்சியினர் துரோகம் செய்யாமல் வேட்பாளர்களுக்கு உண்மையாக உழைத்து அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்” என்றார்.