ஆண்ட பரம்பரை.., “எனது பேச்சை எடிட் செய்துவிட்டார்கள்” புது விளக்கம் கொடுத்த அமைச்சர் மூர்த்தி!
நான் பேசியதை சிலர் தவறாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் என அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை : அமைச்சர் மூர்த்தி அண்மையில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில், ” இது ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக 5 ஆயிரம் 10ஆயிரம் பேர் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் எனற வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.” என்றும்,
” ஆங்கிலேயர்கள் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து செல்வதை தடுக்க இந்த சமுதாயத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். உசிலம்பட்டியில் கூட 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நமது சமுதாயத்தில் போதிய படிப்பறிவு அப்போது இல்லாத காரணத்தால் நமது வரலாறுகளை வெளியே கொண்டுவரடியாத சூழல் இருந்தது.” என்றும் பேசியிருந்தார்.
ஒரு சமுதாய மக்களை உயர்த்திப்பிடிக்கும் வகையில் அமைச்சர் மூர்த்தி பேசியதாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதுகுறித்து இன்று மதுரையில் விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர். அதில் அவர் கூறுகையில், “நான் பேசியதை சிலர் தவறாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். ”
“நான் பேசிய வீடீயோவை முழுதாக பாருங்கள். பிறகு கேள்வி எழுப்புங்கள். தவறான தகவலை சிலர் பரப்புகின்றனர். நான் அமைச்சர் எல்லா சமுதாய மக்களுக்கும் பொதுவானவன். படித்து 450 பேர் பணியில் சேர இருந்தனர். அவர்களிடம் பேசும்போது , எல்லா தரப்பு மக்களும் இருப்பார்கள். அவர்கள் அனைவரிடமும் அனுசரித்து வேலை செய்ய வேண்டும். என்று தான் கூறினேன். யாரோ வேண்டுமென்றே நான் 2,3 மாதங்களுக்கு முன்பு பேசிய வீடீயோவை எடிட் செய்து பதிவிடுகிறார்கள்.
ஆண்ட பரம்பரை என ராஜராஜ சோழன் மன்னர் காலத்தை குறிப்பிட்டு சொன்னேன். அதனை தவறாக சிலர் பரப்பிவிட்டனர்.அதற்கு நன் பொறுப்பாக முடியாது.” என அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.