“தமிழ்நாட்டில் டெங்கு., இந்த 10 மாவட்டங்களில் அதிகம்.” அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!
கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரையில் 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், ” கடந்தாண்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு பாதிப்பு என்பது பெரியளவில் இல்லை. 80 நாடுகளில் டெங்கு பாதிப்பு இருந்தது. ஆனால் , தமிழகத்தில் அந்த பாதிப்பு இல்லை.
2012ஆம் ஆண்டு 66 டெங்கு உயிரிழப்புகளும், 2017இல் 65 டெங்கு உயிரிழப்புகளும் பதிவாகி இருந்தது. ஆனால் 2023இல் அந்தளவு பெரிய பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை. டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு டெங்கு பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்தாண்டு ஜனவரி 1 முதல் தற்போது வரையில் 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு வந்தவுடன் யாரும் உயிரிழப்பதில்லை. நோய் வந்து அதனை சரிவர கவனிக்காமல் டெங்கு தீவிரமடைந்த பின் சிகிச்சை பெற்றவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் கர்ப்பிணிகள் குழந்தைகள் தான் டெங்குவால் அதிகம் பாதிப்படுகின்றனர். தினமும் 400 – 500 என்ற அளவில் டெங்கு பாதிப்பு தமிழ்நாட்டில் உள்ளது. நேற்று (செப்டம்பர் 1) 205 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே நோயாளிகளுக்கு கொடுக்கப்டுகின்றன. குறிப்பாக இதுவரை பதிவான 11,743 பேருக்கான டெங்கு பாதிப்பில் 57.6 சதவீதமானது சென்னை , கோவை , மதுரை , திருச்சி , திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளது.
அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். டெங்கு பாதிப்பை பெரிதளவில் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது.” என தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.