பிரசவம் பற்றி இவருக்கு என்ன தெரியும்னு சொல்றாங்க… மேடையில் வருத்தப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன்.!
நான் மகப்பேறு அறுவை சிகிச்சை பற்றி பேசியதை வைத்து தவறாக புரிந்து கொண்டு ஒரு மருத்துவர் என்னை விமர்சித்துள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தார் .
அண்மையில் சென்னை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரசவ அறுவை சிகிச்சை பற்றி மத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியிருந்தார். அவர் கூறுகையில், 100 சதவீதம் சுகப்பிரசவம் என்பது தான் தமிழக மருத்துவத்துறையின் இலக்கு என பேசியிருந்தார். அதனை நோக்கி பயணித்து வருகிறோம் அதற்காக பல்வேறு நடவடிக்கை எடுத்து வரப்படுவதையும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற சர்வதேச மருத்துவ கருத்தரங்கு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், ‘ நான் 100 சதவீதம் சுகப்பிரசவம் இலக்கை எட்ட வேண்டும் என கூறியிருதேன். மகப்பேறு அறுவை சிகிச்சையை குறைக்க வேண்டும் என கூறியிருந்தேன்.
அதனை ஒரு மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் தவறாக நினைத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இவருக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை பற்றி என்ன தெரியும் என்பது போல குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால், நான் உண்மையில், குறிப்பிட்டது அறுவை சிகிச்சைக்கு எதிராக அல்ல. தவிர்க்கமுடியாத நேரத்தில் சுகப்பிரசவம் தவறில்லை தான். அதனை வைத்து பணம் செய்வதை தான் தவறு என நாங்கள் குறிப்பிடுகிறோம். அறுவை சிகிச்சை செய்தால் பணம் கிடைக்கும் என அறுவை சிகிச்சைக்கு தள்ளப்படுவதை தான் தவறு என நாங்கள் குறிப்பிடுகிறோம்.
முன்பு பிரசவ நேரம் வரையில் வீட்டு வேலைகளை பெண்கள் செய்து வந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. அதனை தவிர்த்து சுகபிரசவ வழிகளையும் சொல்லி தருகிறோம் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் மேடையில் குறிப்பிட்டு பேசினார்.