மருத்துவர்கள் தவறை ஒத்து கொண்டார்கள்.. இதனை அரசியலாக்க வேண்டாம்.! – மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.!
மருத்துவர்கள் கவனக்குறைவு மூலம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆபரேஷன் சரியாகதான் நடைபெற்றுள்ளது. ஆனால் தவறாக கட்டிப்போட்டதால் தான், ரத்த ஓட்டம் செல்லாமல், சிறுநீரகம் செயலிப்பு ஏற்பட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார். – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னை, கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாகவும் , அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அதில், இந்த விஷயத்தை நாங்கள் கடந்து போக மாட்டோம். தமிழகத்தில் உள்ள அரசுமருத்துவமனைகளில் மொத்தமாக 1.75 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். 20,000 மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். 11,333 அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் இருக்கிறது. 6 லட்சம் பேர் தினசரி வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். 60,000 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.
யாரும் பாதிக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம். 1,121 மருத்துவ காலிப்பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு, மருத்துவர்களை நியமிக்க உள்ளோம். மருத்துவ காப்பீடு மூலம் 1,513 நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுளது. தயவு செய்து மக்கள் உயிர் விஷயத்தினை அரசியலாக மாற்ற வேண்டாம். எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மாணவி பிரியாவுக்கு ஏற்கனவே கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கவனக்குறைவால் கட்டு போடப்பட்டுள்ளது. அதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் கவனக்குறைவு மூலம் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்கள். ஆபரேஷன் சரியாகதான் நடைபெற்றுள்ளது. ஆனால் கட்டிப்போட்டது தான் உயிரிழப்புக்கு காரணம். அதன் காரணமாக சரியாக ரத்த ஓட்டம் செல்லாமல், சிறுநீரகம் செயலிப்பு ஏற்பட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார்.
நாங்கள் நேற்று கூட அரசு மருத்துவமனையில் சென்று மாணவியை சந்தித்து நலம் விசாரித்தோம். அப்போது அரசு சார்பில் பேட்டரி கால் வழங்க ஏற்பாடு செய்வதாக நாங்கள் கூறினோம். ஆனால் தற்போது அந்த வீராங்கனை நம்முடன் இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி.
இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில், உயிரிழந்த பிரியாவின் வீட்டில் ஒருவருக்கு அரசு பணியிடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளோம்.தயவு செய்து இதனை அரசியலாக்க வேண்டாம்.
இதுகுறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போன வாரம் பிரியாவுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மேல் சிகிச்சை செய்ய ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் கூறியும், ப்ரியாவின் உறவினர்கள், தனது உறவினர் ஒருவர் பெரியார் மருத்துவமனையில் இருப்பதாக கூறி அங்கு சென்றுள்ளனர். என வீராங்கனை பிரியா இறப்பு குறித்து மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்களை தெரிவித்தார்.