“எருமை மாடா நீ? பேப்பர் எங்கே?” உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
தஞ்சையில் நடைபெற்ற வேளாண்துறை நிகழ்வில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உதவியாளரை ஒருமையில் திட்டிய விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச முன்வந்தார்.
அவர், மைக் முன்னாடி நின்று கொண்டு பேச முற்படும்போது தனது பேச்சு குறிப்பை எடுத்துவரவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து, தனது உதவியாளரை தேடிவிட்டு, “எங்கடா அவன்” என அவர் பெயரை குறிப்பிட்டு, (அவர் வந்த பிறகு), “எருமை மாடாடா நீ பேப்பர் எங்கே?” என கேட்டவுடன் அந்த உதவியாளர் அமைச்சர் பேச வேண்டிய பேப்பரை எடுத்து மேடையில் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
மேடையில் அனைவரது முன்னிலையிலும், மைக் முன் தனது உதவியாளரை ஒருமையில் அழைத்து திட்டிய சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.