ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழா சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், குக்கிராமங்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1346 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் எனவும் அறிவித்தார். மேலும், தமிழகத்தின் மாநில மரமான பனைமரப் பரப்பை அதிகரிக்கவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், ரூ.381.21 கோடி மதிப்பீட்டில் 25 இலட்சம் பனை விதைகள் மற்றும் 69 இலட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் பேரவையில் கூறினார்.