இந்தாண்டு பருவமழைக்கு என்னென்ன முன்னெச்சரிக்கைகள்.? அமைச்சர் விளக்கம்.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. பலவேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தற்போது வங்கக்கடல் பகுதியில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மேலும் மழை அதிகரிக்கும் என கூறி சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் , பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டங்களிலும் மீட்பு படை மற்றும் நிவாரண முகாம்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன என்றும், எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வண்ணம் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பேரிடர் மேலாண்மை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன . தமிழகம் முழுவதும் 4970 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நேற்று தான் கனமழை என்பது மழை ஆரம்பித்துள்ளது. அதனை சமாளிக்க தயாராக உள்ளோம்.
முன்னதாக , மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர், தமிழக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சி தலைவர்கள் தலைமையிலும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
27 மாவட்ட ஆட்சியர்களுக்கு மழை தொடர்பாக அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த 27 மாவட்டங்களிலும் கனமழை பாதிப்பு ஏற்படலாம் என முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழையால் நிரம்பிய நீர்நிலைகளை திறக்கும் போது அங்குள்ள கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையை திறக்கும் போது கூட 80,000 பேருக்கு எஸ்எம்எஸ் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூறப்பட்டது. இதுவரை கனமழையால் எந்தவித பெரிய அளவிலான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.