முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு!
வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கியது தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு.
வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கியது தொடர்பான முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008ல் வீட்டுவசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வாரியத்தின் மனையை ஒதுக்கியதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விதிமுறைக்கு உட்பட்டே நிலம் ஒதுக்கியதாகவும், இதனால் வாரியத்துக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஐ.பெரியசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஐ.பெரியசாமி தரப்பு வாதத்தை ஏற்று, வழக்கில் இருந்து விடுவித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசனுக்கு வீட்டு மனை ஒதுக்கியத்தில் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.