மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன அரசு திட்டங்கள்? -அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்!
3 சக்கர ஸ்கூட்டர், தையல் மிஷின் வழங்குதல், பணி நிரந்தரம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் சட்டப்பேரவையில் எடுத்துரைத்தார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
3 சக்கர ஸ்கூட்டர் வழங்க உத்தரவு :
சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், பேரவையில் திருத்திய உரையை கூறுகிறேன். கடந்த 2009 – 2010-ல் கலைஞர் ஆட்சிகாலத்தில் 2 கால் முழுதாக பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள், சுயதொழில் செய்வோர், பெண்கள் என மாற்றுத்திறனாளிகள் பலருக்கும் 3 சக்கர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இவை கடந்த 2014 – 2015 காலகட்டத்தில் பெட்ரோல் ஸ்கூட்டராக மாற்றம் செய்யப்பட்டது. இதனை 2023 – 2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் அரசாணை வெளியிட்டார். அதில், ஒருகால் பாதிக்கப்பட்டோருக்கும் 3 சக்கர ஸ்கூட்டர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 65 வயது வரை ஒரு கால் இயங்கவில்லை என்றாலும், 60 விழுக்காடு வரை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு வருமான உச்சவரம்பு இல்லை.
இணைப்பு பக்கவாட்டு கொண்ட பேட்டரி ஸ்கூட்டர்
இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேசுகையில், எங்கள் தொகுதியில் மாற்றுதிறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய வாகனங்கள் கேட்டிருந்தோம். 34 பேரில் 2 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டடுள்ளது. அதேபோல அறிவுசார் மாற்று திறனாளிகள், தசை சிதைவு மாற்று திறனாளிகளின் தாய்மார்கள் அவர்களை அழைத்து கொண்டு செல்ல தாய்மார்களுக்கு இணைப்பு பக்கவாட்டு கொண்ட பேட்டரி ஸ்கூட்டர் வழங்க வேண்டும்.
அதே போல, 75% அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தசை சிதைவு மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு தையல் மிஷின் கொடுக்கிறோம். அந்த 75% என்பதை , 50, 60 சதவீதமாக குறைத்தால் இன்னும் பலர் பயன்பெறுவர் என கோரிக்கை வைத்தார்.
முதலமைச்சரோடு ஆலோசனை
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன், கடந்த ஆண்டு மட்டுமே 851 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. திருசி கிழக்கு தொகுதியில் மட்டும் 46 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2 பேருக்கு மட்டும் வழங்கப்படவில்லை. மீதம் உள்ள நபர்களுக்கும் இந்தாண்டு ஸ்கூட்டர் வழங்கப்படும். அறிவுசார் மற்றும் தசை சிதைவு மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கு இணைப்பு பக்கவாட்டு பொருத்திய ஸ்கூட்டர் கொடுக்க முதலமைச்சரோடு ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது பேட்டரி வீல்சேர் அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சுயதொழில் தொடங்க மானிய திட்டத்தை நமது முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
பணிநிரந்தரம் :
இதனை அடுத்து எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் கூறுகையில், நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறன்களிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவிகளில் அமர்த்தப்படுவார்கள் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்கள். கலைஞர் முதல்வராக இருந்த போது 2 ஆண்டுகள் தொகுப்பூதியம் பெறுவோருக்கு பணி நியமனம் செய்யுமாறு உத்தரவிட்டார். ஆனால் இன்னும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டி பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறது என கூறினார்.
1,200 காலிப்பணியிடங்கள்
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதாஜீவன், அரசாணை 151 மறுஆய்வு செய்து அவை நிலை எண் 20ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனபடி, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதன் மூலம் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 1,200 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கான தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும். அதற்கு முதலமைச்சர் முன்னதாக உத்தரவிட்டுள்ளார்.