வீட்டில் நடந்த ரெய்டு: “வந்தாங்க.. ஒன்னுமில்லைன்னு போய்ட்டாங்”- அமைச்சர் துரைமுருகன்.!
தன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் திடீர் சோதனை நடைபெற்றது.
அதை தொடர்ந்து, கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடையோர் வீடுகளிலும் நேற்றைய தினத்தை தொடர்ந்து இன்றும் அமலாகாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தன் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “வந்தார்கள், ஒன்றுமில்லை என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள்” என்றார்.
எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது என்று அமலாக்கத்துறை தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சோதனை குறித்து நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், ‘வந்திருப்பது யார் என்றே தெரியவில்லை.
பத்திரிகையாளர்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியுமோ அந்த அளவுக்கு தான் எனக்கும் தெரியும். வீட்டில் யாரும் இல்லை. வீட்டில் பணியாளர்கள் மட்டுமே தற்போது இருக்கின்றனர்.” என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.