குடும்ப அட்டை விநியோகத்தில் தாமதம்? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்.!
சென்னை : மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், புதியதாக குடும்ப அட்டை விண்ணப்பித்த இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவதில் ஏன் தாமதம்? குடும்ப அட்டைகளை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
தற்பொழுது அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை, தகுதியுள்ள அனைவருக்கும் விரைந்து வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ஒப்புதல் அளிக்கப்பட்ட 24,657 விண்ணப்பங்களுக்குப் புதிய குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை. விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விரைந்து வழங்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த மூன்று ஆண்டுகளில், இதுவரை 15.94 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது” எனவும் கூறினார்.