தாமிரபரணி ஆற்றின் நீர்வழிபாதையில் புதிய திட்டங்கள்… அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு.!
தென்மாவட்டத்தில் பெய்த் அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் இருந்த பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
தற்போது ஒருசில முக்கிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பினாலும், இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட நிவாரண பணிகள்.. அரசியல் செய்ய வேண்டாம்.! அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்.!
இந்நிலையில், தாமிரபரணி நீர்நிலைப்பகுதிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மூத்த ஓய்வுபெற்ற நீர்நிலை பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி , நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் சேதமடைந்து உள்ளது என்பதை அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் கணக்கிட்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,தாமிரபரணி நீர்வழித்தடங்களில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும். உடைந்த நீர்நிலைகள் சீரமைக்கப்படும். இந்த திட்டத்திற்காக முதல்வரின் ஒப்புதல் பெற்று விரைவில் தாமிரபரணி நீர்நிலை திட்டங்கள் அறிவிக்கப்படும். கருப்பந்துறை உயர்மட்ட பாலம் அமைக்க 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை கனமழையால் 5 மாவட்ட சாலைகள் சேதமடைந்துள்ளன. அவை தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன. நெல்லையில் 108 சாலைகளும், தூத்துக்குடியில் 44 சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.