“ஹிந்தியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன., தமிழுக்கும் அதே நிலைமை?” அன்பில் மகேஷ் விரிவான விளக்கம்!
ஹிந்தி மொழியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன என அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திருச்சி : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தின் கீழ் தமிழகம் சேராதது வரையில் தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பது போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மும்மொழி கொள்கை மூலம் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்கிறது என தமிழகத்தில் திமுக, அதிமுக , விசிக, காங்கிரஸ், நாதக, தவெக என அனைத்து கட்சியினருமே எதிர்ப்பு குரலை பதிவு செய்து வருகின்றனர்.
அன்பில் மகேஷ் விளக்கம் :
இப்படியான சூழலில், நாங்கள் (தமிழ்நாடு அரசு) ஏன் தேசிய கல்வி கொள்கையை எதிர்க்கிறோம்? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். அதில் பேசிய அவர், ” 1968ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா உருவாக்கிய இருமொழி கொள்கையில் தமிழ் – ஆங்கிலம் உள்ளது. இந்த கொள்கையானது 1930, 1960ஆகிய காலகட்டத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்டது.
இரு மொழி கொள்கை :
3வது மொழி திணிப்பு என்பது பாரம்பரிய தமிழ் மொழியை பலவீனப்படுத்தும். இருமொழி கல்வி மூலம் பிற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்தால் தமிழ்நாடு கல்வியில் பல சாதனைகளை படைத்துள்ளது. உள்ளூர் தேவைக்கும், சர்வதேச போட்டி தேர்வுகளுக்கும் இடைய சமநிலையை இருமொழி கொள்கை உருவாக்கியுள்ளது. இருமொழி கொள்கையானது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை தந்துள்ளது.
கல்வியில் மாநில சுய ஆட்சியின் கீழ் இருமொழி கொள்கை இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் அமைந்துள்ளது. இது மாநில சூழலுக்கு ஏற்ப பண்பாட்டு கல்வி கொள்கைகளை வகுக்க உதவுகிறது. 3வது மொழியை திணிப்பது அரசியலமைப்பு சட்டத்தையும், மாநில சுய ஆட்சியையும் மீறும் செயலாகும்.
மொழித்திணிப்புக்கு எதிர்ப்பு :
மும்மொழி கொள்கையில் நெகிழ்வு தன்மை இருந்தபோதிலும், அதில் தமிழ்நாட்டில் ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகவே உள்ளது. 1937 ,1965-ல் வேரூன்றிய இந்தி திணிப்பு கவலை, தமிழ் மொழிக்கு எதிரான அத்துமீறிய செயலாக உள்ளது. அதனை அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் , ஜெயலலிதா என அனைத்து தலைவர்களுமே அந்தந்த காலகட்டத்தில் எதிர்த்தனர். 3வது மொழியை அறிமுகம் செய்வது என்பது, ஹிந்தி தவிர மற்ற மொழிகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் பற்றாக்குறையை உருவாக்கும். இது மாணவர்களை ஹிந்தி கற்க வறுபுறுத்தும் ஒரு நிலையாக அமைந்துவிடும்.
மாணவர்களுக்கு பயனளிக்கும் :
ஆரம்ப பள்ளி காலகட்டங்களில் மாணவர்கள் குறைவான மொழியை கற்பது மாணவர்களுக்கு பயனளிக்கும் என பல்வேறு ஆராய்ச்சிகளே கூறுகிறது. தமிழ்நாட்டின் இருமொழி கொள்கை உள்ளூர் மற்றும் சர்வதேச தேவைக்கு உறுதுணையாக உள்ளது. ஹிந்தி மொழியை கற்பதற்கு தமிழ்நாட்டில் தடையில்லை. படத்திட்டத்திற்கு வெளியே தன்னார்வ கற்றலை ஊக்குவிக்கிறோம். கட்டாயம் என்று கூறி இன்னொரு மொழியை கொண்டு வரும்போது தான், அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், மன சுமையையும் தருகிறது.
இணைப்பு மொழி ஆங்கிலம் :
இரு மொழி கொள்கையில் மாணவன் எவ்வளவு வேகமாக செல்கிறானோ, அவனை மும்மொழி கொள்கை மூலம் காலில் சங்கிலி கட்டி தடுப்பதற்கு சமம். இந்த மனஉளைச்சல் காரணமாக மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும். பன்மொழி நாட்டில் அதிகாரப்பூர்வ மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். அதனை ஆங்கிலம் திறம்பட செய்து கொண்டிருக்கிறது என அறிஞர் அண்ணா கூறினார். 1963 மொழிகள் சட்டத்தில் இருந்து, 1976-ல் விலக்கு பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதனை NEP மீறக்கூடாது.
56 மொழிகள் அழிந்துவிட்டது :
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொள்கைகள், தலைவர்கள் வேறு வேறாக இருந்தாலும் அனைத்து கட்சியினரும் எதிர்த்து தான் பேசி வருகின்றனர். எட்டு திசையில் இருந்தும் ஒட்டுமொத்த குரலாக எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. அனைவரும் இரு மொழி கொள்கையை ஆதரிக்கின்றனர். ஹிந்தி மொழியால் 56 இந்திய மொழிகள் அழிந்துவிட்டன. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஒடிசா மாநில ஒடிசா மொழி, போஜ்பூரி மொழி உட்பட, ராஜஸ்தானி என பல்வேறு மொழிகள் ஹிந்தி திணிப்பால் அழிந்துவிட்டன. இதனை போல் தமிழ் அழிந்துவிட கூடாது என்பதால் தான் அதனை எதிர்த்து வருகிறோம்.
அதே போல, 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என கூறுவதையும் எதிர்க்கிறோம். தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து விட்டால், நமது வரலாற்றில் உள்ள நல்லவர்களை கெட்டவர்களாக காட்டுவார்கள். கெட்டவர்களை நல்லவர்களாக காட்டுவார்கள். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். இது சுமார் 45 லட்சம் மாண்வர்களின் எதிர்காலம்.” என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.