“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு அஜித் பட வசனமான 'கை கால் இருக்கும் உயிர் இருக்காது' என்பது போல அவரை டம்மியாக உட்கார வைத்துள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அம்பேத்கர் பற்றியும் அவர் எழுதிய அரசியல் சாசனம் பற்றியும் பேசினார்.
அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசன சட்டங்கள் பற்றி பேசுகையில், அண்மையில் உச்சநீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு எதிரான தீர்ப்பை சுட்டிக்காட்டி பேசினார். அவர் பேசுகையில், ” நமக்கு பைபிள், குரான் போன்றது அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம். இது எவ்வளவு முக்கியம் என்பது கடந்த 8ஆம் தேதி ஆளுநருக்கு அதிகாரமில்லை நாட்டை ஆள்பவருக்கே அதிகாரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால், அஜித் பட வசனம் போல, ‘உடம்பில் கை இருக்கும், கால் இருக்கும், ஆனால், உயிர் இருக்காது!’ என கூறுவது போல ஆளுநர் ரவியை டம்மியாக உக்கார வைத்துள்ளார் நம்ம முதலமைச்சர். நமக்காக இருக்கும் நீதிமன்றத்தை நாம் நாடி செல்வோம். நீதிமன்றத்திற்கு அரசியல் சாசனம் எனும் ஆயுதத்தை எடுத்து செல்வோம். இந்த ஆயுதத்தை கொண்டு எவ்வளவு பிற்போக்குத்தனமான நபராக இருந்தாலும் அவனை வீழ்த்திவிட முடியும். அம்பேத்கர் ஆதி திராவிடர் மக்களுக்கான தலைவர் இல்லை. அவர் பிற்போக்குவாதிகளுக்கு எதிரானவர்” என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்கிறார் என தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பளித்து ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதம் செய்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.