“மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.!
அசோக் நகர் அரசுப் பள்ளி ஆசிரியரை தவறாக பேசிய மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு எனும் பெயரில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அடிப்படையிலே தற்போது பிறப்பு அமைகிறது என்றும் மாற்று திறனாளிகள் குறித்த சர்ச்சை கருத்தையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மகா விஷ்ணு பேசிக் கொண்டு இருக்கும் போதே, பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், மகா விஷ்ணு – ஆசிரியர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆசிரியர் பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை மகா விஷ்ணு பேசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பள்ளிக்கல்வித்துறையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
Read more – “தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது., கண்டிப்பாக தண்டனை உண்டு.” அன்பில் மகேஷ் உறுதி.!
சம்பவம் அறிந்த உடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக அசோக் நகர் அரசு பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 3-4 நாட்களில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.
தண்டனை உறுதி :
அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்தார். அந்த செய்தியாளர் சந்திப்பு மேடையில் ஆசிரியர் சங்கர் உடனிருந்தார். அந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில், கல்வி மட்டுமே சமூகம் மலரச்செய்யும் ஆயுதம் என்ற கொள்கையோடு செயல்பட்டு வருகிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தவறை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தண்டனை என்பது உறுதி. தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிகை எடுப்போம்.
இந்த சொற்பொழிவு நிகழ்வுக்கு பின்னர் தலைமை ஆசிரியர் காரணமா.? பள்ளிக்கல்வித்துறை அதிகாரி காரணமா.? என்பது இன்னும் 3,4 நாட்களில் விசாரணையில் தெரிந்துவிடும். அசோக் நகர் அரசுப் பள்ளி பல வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளி. அங்கு இதுபோல ஒரு சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, மட்டுமல்ல கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தற்போது வாய்மொழி உத்தரவு பிறப்பித்தாலும், காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
“சும்மா விட மாட்டேன்”
ஒரு ஆசியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சங்கர் சார் நம்முடன் இருக்கிறார். தவறு நடந்தால் அவரைப்போல உடனடியாக கேள்வி கேட்க வேண்டும். அதனால் தான் அவரை மேடையில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்தேன். புகார் கொடுப்பது அவர் இஷ்டம். இருந்தாலும், நான் மகா விஷ்ணுவை சும்மா விட மாட்டேன்.
இது எங்கள் துறை, எனது துறையை சேர்ந்த ஆசிரியரை பற்றி மகா விஷ்ணு பேசியுள்ளார். ” மறப்போம் மன்னிப்போம்” என அவர் சொல்லி இருக்கிறார். அது சங்கர் சாருடைய பெருந்தன்மை. ஆனால், நான் சும்மா விடமாட்டேன். 3 நாளில் நடவடிக்கை எடுப்போம்.
பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளரை பேச வைப்பது நல்ல விஷயம் தான். இருந்தாலும் வருவது யார், அவருடைய பின்னணி என்ன என அறிந்து தான் பள்ளிக்கு ஆசிரியர்கள் அவரை அழைத்து வந்திருக்க வேண்டும்.” என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.