ஜேஇஇ தேர்வில் சிக்கல்.? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி.!
ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத தமிழக மாணவர்களுக்கு உள்ள சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாமல் தேர்ச்சி எனும் சான்று வாங்கிய மாணவர்கள் தற்போது 12ஆம் வகுப்பு முடித்து ஐஐடி கல்லூரியில் சேருவதற்கு எழுதும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை எழுந்துள்ளது.
ஏனென்றால், தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜேஇஇ நுழைவு தேர்வு எழுத 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று தேவைப்படும். இதனால் ஜேஇஇ தேர்வு எழுதுவதில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளளது.
இது குறித்து தமிழக அரசுக்கு மாணவர்கள் சார்பில் கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து, இன்று தலைமை செயலகத்தில் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், தமிழக மாணவர்கள் ஜேஇஇ தேர்வுகள் எழுதுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.