கோடிக்கணக்கில் பிடிபட்ட கள்ளநோட்டுகள்..!

Published by
Dinasuvadu desk

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தபோது, புதியதாக ரூ.2,000 நோட்டை அறிமுகம் செய்தது.

அந்த 2,000 ரூபாய் நோட்டு மாறுபட்ட கலர் மற்றும் வடிவமைப்புடன் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த நோட்டு போன்று கள்ள நோட்டு தயாரிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த அளவுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் 2,000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் வடமாநிலங்களில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்தும் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்து இந்தியாவுக்குள் வினியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கோவை உள்பட தமிழகம் முழுவதும் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறித்து போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கோவையில் 2,000 ரூபாய் நோட்டுகளை கோடிக்கணக்கில் அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்தவர் பிடிபட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன். இவருடைய மகன் ஆனந்த் (வயது 31). இவர் மீது கோவை நகர போலீசில் ஏற்கனவே மோட்டார் சைக்கிள் திருட்டு குற்ற வழக்குகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக கோவை நகரில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. எனவே மோட்டார் சைக்கிளை திருடும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். மோட்டார் சைக்கிளை திருடும் பழைய குற்றவாளிகளையும் தேடிவந்தனர்.

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மோட்டார் சைக்கிள்களை திருடுபவர் என்பதால் அவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு ஆனந்த் மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

ஆனந்தின் சட்டை பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பிரித்து பார்த்தனர். அந்த ரூபாய் நோட்டுகள் கம்ப்யூட்டரில் போட்டோ காப்பி செய்து கலர் ஜெராக்ஸ் மெஷின் மூலம் பிரதி எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அசல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், ஆனந்த் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் அருகருகே வைத்து ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது ஆனந்த் வைத்திருந்தது கள்ள நோட்டுகள்தான் என்பது உறுதியானது.

இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த கள்ள நோட்டுகளை கொடுத்தது யார்? என்று அவரிடம் கேட்டனர்.

முதலில் ஆனந்த் உண்மையை கூற மறுத்தார். பின்னர் தீவிர விசாரணையில் அவர் உண்மையை கக்கினார். பணத்துக்கு ஆசைப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை நண்பர்களுடன் சேர்ந்து அச்சடித்து வருவதாக கூறினார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின் பேரில், போலீஸ் துணை கமிஷனர் தர்மராஜன், உதவி கமிஷனர்கள் சோமசேகர், சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், செந்தில் குமார் ஆகியோர் ஆனந்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். கள்ள ரூபாய் நோட்டுகளை எங்கு வைத்து அச்சடிக்கிறீர்கள்? என்று அவரிடம் விசாரித்தனர். அதற்கு அவர் கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் ஒரு கடையில் அறை அமைத்து மாதம் ரூ.2,700 வாடகை செலுத்தி நண்பர்களுடன் சேர்ந்து அச்சடிப்பதாக கூறினார்.

உடனே போலீசார் வேலாண்டிபாளையத்துக்கு விரைந்தனர். ஆனந்த் குறிப்பிட்ட கடையில் அறைபோல் அமைக்கப்பட்டு இருந்ததை திறந்து சென்று பார்த்தனர். அங்கு கட்டுக்கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

அந்த அறை முழுக்க போலீசார் சோதனை நடத்தினார்கள். அங்கு, 52 பண்டல்களில் ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன.

கட்டுக்கட்டாக இருந்த அந்த கள்ள நோட்டுகளை பார்த்ததும் போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் அச்சு அசல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் போலவே இருந்தன. ஒரே சீரியலில் 50 நோட்டுகள் வீதம் அச்சடித்து இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 5,904 எண்ணிக்கையிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள நோட்டு தயாரிக்க கம்ப்யூட்டர் மற்றும் ஒரு கலர் ஜெராக்ஸ் மெஷினை பயன்படுத்தி உள்ளனர். கலர் ஜெராக்ஸ் மெஷினில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கலர் போலவே உள்ள மையை பயன்படுத்தி உள்ளனர்.

மிக நூதனமான முறையில் அவர்கள் இந்த கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர். கலர் ஜெராக்ஸ் மெஷின், பிரிண்டர் கருவி, கள்ள நோட்டுகளை கத்தரிக்கும் கருவி, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள், வெள்ளை காகித கட்டு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ள நோட்டு அச்சடிப்பதில் காரமடையை சேர்ந்த சுந்தர், யூசுப் ஆகியோர் முக்கியமாக செயல்பட்டுள்ளனர். ஆனந்த் பிடிபட்ட தகவல் அறிந்ததும் அவர்கள் இருவரும் அறையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

வேலாண்டிபாளையத்தில் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய கடையை 1½ மாதத்துக்கு முன்பு தான் சுந்தர் வாடகைக்கு எடுத்து, ஆனந்த், யூசுப் ஆகியோர் மூலம் இரவு, பகலாக கள்ள நோட்டுகளை தயார் செய்து வந்து உள்ளார்.

கள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கோவையிலும், அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரியிலும் புழக்கத்தில் விட்டதாக தெரிகிறது. அசல் ரூபாய் நோட்டுகளுடன் கலந்தும், பெட்ரோல் பங்க் மற்றும் கடைகளில் தனித்தனியாக கொடுத்தும் இவற்றை புழக்கத்தில் விட முயன்றுள்ளனர். எந்த அளவுக்கு புழக்கத்தில் விட்டனர் என்பது சுந்தர் கைதான பின்னர்தான் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் அதிகம் பேர் இருப்பதால் அவர்கள் மூலம் புழக்கத்தில் விட்டுள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கும்பலைச் சேர்ந்த யூசுப், சுந்தர் ஆகியோருக்கு பல இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட அனுபவம் உள்ளதால் அவர்கள் அந்த நோட்டுகளை எளிதாக புழக்கத்தில் விட்டு உள்ளனர். சென்னை, ஈரோடு, திருப்பூர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கு அறை எடுத்து தங்கி இருந்து, இரவு நேரத்தில் வெளியே சென்று கள்ள நோட்டுகளை கடையில் கொடுத்து மாற்றி உள்ளனர்.

பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்து அதை மாற்ற முடியாமல் என்ன செய்வது என்று தவித்துக்கொண்டு இருப்பவர்களை தொடர்பு கொண்டு பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக கூறுவார்கள். உதாரணமாக ரூ.1 கோடிக்கு பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் அதற்கு பதிலாக ரூ.25 லட்சத்துக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுப்பதாக கூறுவார்கள். அப்படி கூறியும் கள்ள நோட்டுகளை மாற்றி இருக்கிறார்கள்.

அப்படி பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கியவர்கள், அவை கள்ளநோட்டுகள் என்று தெரிந்தாலும் புகார் எதுவும் கொடுக்க முடியாது என்பதால், இந்த கும்பல் சுதந்திரமாக செயல்பட்டு உள்ளது. தலைமறைவாக இருக்கும் யூசுப், சுந்தர் ஆகியோரை பிடித்தால் மேலும் பல தகவல்கள் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பல கோடி மதிப்புக்கு ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அந்த கள்ள நோட்டுகள் கோவை மற்றும் அண்டை மாவட்டங்கள், கேரளா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டதா? என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறும்போது, “கள்ளநோட்டு கும்பலில் சுந்தர் என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளதால் அவரையும், கூட்டாளி யூசுப் என்பவரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கலர் ஜெராக்ஸ் மூலம் இந்த நோட்டுகளை தயாரித்துள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்-யார்?, வெளி மாநில தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்த தனிப்படையை போலீஸ் கமிஷனர் பாராட்டினார். கோவையில் ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
Dinasuvadu desk
Tags: Millennium

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

4 minutes ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

12 minutes ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

2 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

3 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

6 hours ago