தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி முதல் பால் நிறுத்த போராட்டம்!
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி வரும் 28-ம் தேதி முதல் தொடர் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.32 லிருந்து ரூ.42க்கும், எருமை பால் ஒரு லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.51க்கும் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர்.
இதனிடையே, தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் தலைவர் தெரிவித்துள்ளார்.