பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்..!
மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களுக்கு தற்போது லிட்டர் ஒன்றுக்கு ஆவின் தரப்பில் 32 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாட்டுத்தீவன விலை உயர்வு, பால் எடுத்துசெல்லும் வாகன போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்களுக்கு தனியார் ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் கூடுதலாக உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களின் போராட்டம்
முன்னதாக, பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் பொது மேலாளர் சாந்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களின் இந்த பால் நிறுத்த போராட்டத்தால் மதுரை ஆவினுக்கு வரக்கூடிய பால் வரத்து குறைந்தது.
போராட்டம் வாபஸ்
இந்த நிலையில், தற்போது மதுரையில் ஆவினுக்கு பால் கொடுக்காமல் உற்பத்தியாளர்கள் நடத்திய பால் நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் வழக்கம்போல் பால் வழங்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். பால் விலை உயர்வு அறிவிப்பு விரைவில் வரவில்லை என்றால் வரும் 17-ல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.