5 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் மிக்ஜாம் புயல்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு 290 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே புயல் கரை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர புயலாக கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், சில நிமிடங்களில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கூட காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தற்போது மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
‘மிக்ஜாம்’ புயலால் சென்னையில் கனமழையுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாமுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வடக்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயலால் சூளேரிக்காடு, மாமல்லபுரம், கொக்கிலமேடு, புதுப்பட்டினம், காசிமேடு, எண்ணூரில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. சென்னையில் இன்று காலை வரை வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு பெய்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று காலை வரை சென்னையில் 680.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தைவிட 6% குறைவாக பெய்துள்ளது.
அக்டோபர் 1 முதல் இன்று வரை வழக்கமாக 367.4 மி.மீ பதிவாக வேண்டிய சூழலில், 346.6 மி.மீ மட்டுமே பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.