எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா..!.ஸ்டாலின் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும்..!ஆசைப்படும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது 100 வது பிறந்த நாள் முதல் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்தது.
எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசு எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகிறது.
இதேபோல் சென்னையில் வருகின்ற 30-ந்தேதி நிறைவு பெற இருக்கிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும்படி பிரமாண்ட ஏற்பாட்டை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கி நடத்துகிறார்.மேலும் அதிமுகவை சார்ந்த அனைத்து அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கான அழைப்பிதழ்களில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றது.
வாழ்த்துரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளரும் ,ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிமுகவிற்கு முக்கிய எதிரிகளாக கருதப்படும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அழைப்பு தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கரூரில் அவர் கூறுகையில்,சென்னையில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் திமுக கலந்துகொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று அண்ணாவின் தலைமையை ஏற்று பணியாற்றியவர் எம்ஜிஆர் ஆவார்.
எனவே திமுக நன்றி மறந்துவிடக் கூடாது.மேலும் கருணாநிதியை முதல்வராக்கியது, கருணாநிதியுடன் எம்ஜிஆருக்கு இருந்த நட்பு ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மறந்துவிடக் கூடாது.திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு தரப்பட்டுள்ளது.அமைச்சர் அந்தஸ்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.