இன்று முதல் மேட்டுப்பாளையம் – உதகை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
உதகை:இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அண்மையில் பெய்த கனமழையால் தமிழகத்தில் பல பகுதிகளில் சாலைகள்,வீடுகள் என மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதேசமயம்,நீலகிரி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.குறிப்பாக கல்லார் – அடர்லி இடையேயான வழித்தடத்தில் மண் சரிந்து,மரங்களும் விழுந்தன. இவற்றைச் சரிசெய்யும் பணி நடப்பதால் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை வரும் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது. இருப்பினும்,குன்னூர்-உதகை இடையேயான ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,கல்லார் – அடர்லி இடையேயான ரயில் வழித்தடத்தில் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவுற்றதால் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் – உதகை சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.இது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.