மெட்ரோ ரயிலே சைக்கிள்.! இனிமே கவலையே இல்ல, எங்க வேணாலும் போகலாம்.!
- சென்னையில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது. அதாவது, மெட்ரோ ரயில் பயணிக்கும் பயணிகள், தங்களது பயணத்தின் போது சைக்கிள்களை தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அந்த சைக்கிள் சிறியதாகவும், கையில் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும். பயணிகள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமலும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரவும், ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் சென்று சேரவும் மாற்று வாகனத்துக்கு அல்லது ஆட்டோவுக்கு செலவிடப்படும் தொகையைக் குறைக்கவும் இந்த வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பிற இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து செலவு குறைவதால், பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.