கள்ளச்சாராயத்தில் மெத்தனால்..! வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் – முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!
கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளச்சாராயம் குடித்ததால் வயிறு வலி, மூச்சு திணறல், நரம்பு பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் வியாபாரிகள் மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சமயத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு 4 உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி. எவே வேலு, செஞ்சி மஸ்தான், அன்பரசன் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றவர்கள், அதில் மெத்தனால் எரிச்சாரயம் பயன்படுத்தி உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அனைவரும் கைது செய்யப்படுவர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை அடைத்து விற்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.