ஃபெஞ்சல் புயல் அப்டேட்! வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்!
ஃபெஞ்சல் புயலானது சென்னையில் இருந்து 140 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 150 கிமீ தொலைவிலும் உள்ளது என வானிலை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டு வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும் சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தற்போதைய நிலை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சம் புயலானது சென்னையில் இருந்து தென்கிழக்கே 140 கிமீ தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து தென் கிழக்கே 150 கிமீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
இந்த புயலானது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் காரைக்கால் – மகாபலிபுரம் கடற்கரை பகுதிக்கு இடையே கரையை கடக்க உள்ளது. கரையை கடக்கும் போது 70-80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அவ்வப்போது 90 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.