“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை 23-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மீனவர்கள் இன்று முதல் நவ.26 ஆம் தேதி வரை ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, நவம்பர் 25ஆம் தேதி 7 மாவட்டங்களிலும், நவம்பர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் பல்வேறு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.