வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் வரும் மார்ச் 10-ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை இந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4″ செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏனைய இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 – 39° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 37° செல்சியஸ் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இப்போதே வெயில் இப்படி வெளுத்து வாங்கும் வகையில் இருப்பதால் கோடை மழை பெய்தால் நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்கிறார்கள். இந்த சூழலில், வெயிலுக்கு ஜில்..ஜில் கொடுக்கும் வகையில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் மார்ச் 10-ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.அதைப்போல, 11-03-2025 மற்றும் 12-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெயில் அப்டேட்
மார்ச் 06-03-2025 முதல் 09-03-2025 வரை: அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை
சென்னை பொறுத்தவரையில், இன்று (06-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.