டிசம்பர் 5 பிரதமர் தலைமையில் கூட்டம்! டிசம்பர் 4 முதலமைச்சர் டெல்லி பயணம்!
டிசம்பர் 4ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்.
சமீபத்தில் 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமில்லாமல் 2023-ஆம் ஆண்டு ஜி20 நாடுகளின் மாநாடு இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் டெல்லியில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், டிசம்பர் 5ம் தேதி பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிசம்பர் 4ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என தகவல் தெரிவிக்கின்றன. மேலும், தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. டிசம்பர் 7 முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்டறிய டிசம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்ற வாளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.