ஆளுநர் ரவி – முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.! 20 மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பு.!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற வேண்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்படும். ஆனால், ஆளுநர் ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்காமல், அந்த மசோதாக்களை கிடப்பில் போட்டும், பல்வேறு மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியும் வந்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல், நிலுவையில் வைத்துள்ளார். அதனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நிர்ணயிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தால் முதலமைச்சர்- ஆளுநர் சந்திப்பு..!
இந்த விசாரணையில் நீதிபதி சந்திரசூட் அமர்வு ஆளுநர் ரவியின் செயல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து இருந்தது. மேலும், மசோதா நிலுவை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வரை ஆலோசனைக்கு அழைத்திருந்தார். அதன் பெயரில் இன்று மாலை 5.30 மணி அளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திப்பதற்காக அமைச்சர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார்.
சந்திப்பு நிறைவடைந்த பின்னர், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் ஆளுநர் ரவி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து பேசினார். அவர் பேசுகையில், மொத்தம் 21 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தார். அதில் பத்து மசோதாக்களுக்கு முன்னரே கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். பத்து மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருந்தது. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் தமிழக முதல்வர் தலைமையில் சட்டமன்றம் கூட்டி , அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதில் 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார். இரண்டு மசோதாக்கள் தற்போது அனுப்பப்பட்டுள்ளது என மொத்தம் 20 மசோதாக்கள் தற்போது குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஒரு மசோதாவான, வேளாண் பொருட்கள் விளைபொருள் நிர்ணயம் தொடர்பான மசோதா இன்னும் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. அது ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கிறது.
இது போக அறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 112 கைதிகளுக்கு முன்னரே விடுதலை பெற தமிழக அரசு உத்தரவிட்டு அதற்காக ஒப்புதல் பெறுவதற்கு ஆளுநரிடம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 68 பேரின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து விட்டார். இரண்டு பேரின் விடுதலையை ரத்து செய்துவிட்டார். மீதம் 42 பேரின் விடுதலை குறித்து இன்னும் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. இதுபோக மேலும் 7 பேரின் விடுதலையும் நிலுவையில் உள்ளது என மொத்தமாக 49 கைதிகள் விடுதலை தற்போது ஆளுநர் மாளிகை நிலுவையில் உள்ளது. மேற்கண்ட விவகாரங்கள் குறித்து மனுவாக எழுதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவியிடம் கொடுத்துள்ளார். அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் ஆளுநரை சந்திக்க முதல்வருடன் சென்று இருந்தோம்.
மற்றபடி, தமிழக முதல்வர் பண்பானவர் அதேபோல் ஆளுநரும் தமிழக முதல்வரை நல்லபடியாக வரவேற்று இருந்தார். இந்த சந்திப்பு அமைதியான முறையில் சுமூகமாக நடைபெற்றது. என்றும், தற்போது மனுக்களை அழித்திருக்கிறோம். அடுத்ததாக அந்தந்த துறை அமைச்சர்கள் இது குறித்து விளக்கங்களை ஆளுநரிடம் அளிப்பார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.