மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு – வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு!
மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் தொடர்புடையோர், தனியார் கல்லூரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரக அதிகாரிகள், துறையினரை விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிபதி தண்டபாணி ஆணையிட்டார்.
முறைகேட்டில் தொடர்புடைய தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதிய பலனை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிபிசிஐடி விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020-21 கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாக மனு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.