குப்பையில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டைகள்.! அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பையில் இருந்து கண்டறியப்பட்ட முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டவராயபுரம் கிராம மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அன்று முதல் இதுவரை அவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அட்டையை வழங்கவில்லை. இதுதொடர்பான உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பழனிவேல் என்பவரின் தோட்டத்தில் குப்பைகளுக்கு இடையே மருத்துவ காப்பீடு அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு கண்டறியப்பட்ட அனைத்து மருத்துவ காப்பீடு அட்டைகளும் அப்பகுதி கிராம மக்களுடையது என்பது தெரியவந்துள்ளது. இதனை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக காப்பீடு அட்டை இல்லாமல் 3 பேர் பலியாகியுள்ளனர் என்றும் பல குடும்பங்கள் லட்ச கணக்கில் கடன்பட்டு மருத்துவ செலவை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காப்பீடு அட்டைகளை குப்பையில் வீசிய சென்ற அதிகாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.