நாளை நடைபெறும் மருத்துவ கலந்தாய்வு.! வெளியூர் மாணவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் .!
மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குமான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 39,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பத்திருந்த நிலையில், அவர்களுக்கான தரவரிசை பட்டியலை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார்.
மேலும் இந்தாண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 405 மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .அவர்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டது..
இந்த நிலையில் தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கான மருத்துவ கலந்தாய்வானது நாளை காலை முதல் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து தொடங்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவருடன் ஒருவர் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் , கலந்தாய்வு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறும் என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.முதல்கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவு மாணவர்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களும், மூன்றாவது கட்டத்தில் பொதுப் பிரிவினரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வெளியூர் மாணவர்களின் வசதிக்காக நேரு விளையாட்டு அரங்கிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார் .