மதுரையில் ம.தி.மு.க. எழுச்சி மாநாடு… பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு!
சென்னை எழும்பூரில் மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி மதுரையில் மதிமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்தார். நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும், தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம் என்றார்.
இதன்பின் பேசிய அவர், இந்தியா கூட்டணி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி குறித்து நான் திமுகவிடம் பேசவும் இல்லை. அது பற்றி சிந்திக்கவும் இல்லை. தற்போது பேச்சுவார்த்தை இல்லை, திமுகவுடன் பக்க பலமாக இருப்பேன். தமிழகத்தில் திராவிட இயக்கங்களை யாராலும் அசைக்க முடியாது, இந்துத்துவா தத்துவங்கள் இங்கே கால் ஊன முடியாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் உள்ளிட்ட எது வேண்டுமானாலும் பண்ணலாம்.
ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் பெரியாரும் அண்ணாவும் இயற்றிய சிந்தனை ஓட்டத்தை யாராலும் அகற்ற முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக அணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி ஆலோசனைக்கு கூட்டத்துக்கு நானும் மும்பைக்கு செல்கிறேன், எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது என்றார். மேலும், சிலிண்டர் விலை குறைப்பு குறித்து கூறுகையில், ஒட்டகத்தின் மீது பாரத்தை ஏற்றிவிட்டு, ஒரு துரும்பை மட்டும் எடுத்து விடுவதுபோல கேஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு குறைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.