மதிமுக திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து செயல்படும் என தீர்மானம்!
மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் திராவிட இயக்கத்திற்கு எதிராக பல்வேறு சக்திகள் களம் இறங்கிவருவதால், திராவிட இயக்கத்தை காக்க, திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையம் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமெனவும் தீர்மானம் வாயிலாக மதிமுக வலியுறுத்தியுள்ளது.
உள்ளாட்சி வார்டுகள் வரையறையை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க ஜனவரி 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கவும் மதிமுக வலியுறுத்தியுள்ளது.
மேலும், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது.
source: dinasuvadu.com