மக்கள் நீதி மய்யம் கட்சியில் ‘மய்யம் மாதர் படை’ – கமல்ஹாசன் அறிவிப்பு.!

Default Image

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை செய்து வருகின்றன. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் ‘மய்யம் மாதர் படை’ என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் சமத்துவத்தை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி தங்கள் செயல்பாடுகளிலும் அவர்களுக்கு சரியான பங்களிப்பை கொடுத்து அவர்கள் கரம் உயர்த்த விரும்புகிறது. அவ்வகையில் புதியதோர் முன்னெடுப்பாக மய்யம் மாதர் படை எனும் பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது.

கட்சியின் கட்டமைப்பு மற்றும் அணிகளில் பொறுப்பு வகிக்கும் மகளிரும், கட்சியின் உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இதில் பங்கு பெறலாம். சில செயல் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்த அதிரடியாக ஒன்றிணைந்து செயல்படுவதே இந்தப் பிரிவின் நோக்கம். கட்சி சாராத ஆனால் மக்கள் நலனிலும் தமிழகத்தைச் சீரமைப்பதில் ஒத்த நோக்கமும் கொண்ட பெண்களும் கூட இப்பிரிவில் இணைந்து செயல்படுவார்கள்.

தமிழகம் முழுக்கப் பொது நலனிலும், மாற்று அரசியலிலும் ஆர்வம் கொண்ட மகளிரை மக்கள் நீதி மய்யத்தில் பங்கேற்கச் செய்வதும், வாக்காளர்களைப் பெருமளவில் சந்தித்து கட்சியின் திட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டு சேர்ப்பதும், தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதும் இந்தப் பிரிவுக்கான செயல் திட்டங்களில் முதன்மையானது.

டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு முகாமில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் சார்பில் பூத் அமைக்கப்படுகிறது. இதில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பை ‘மய்யம் மாதர் படை’ மேற்கொள்ளவிருக்கிறது. இந்தப் பிரிவு மகளிர் அணியின் சென்னை மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன்தாஸின் மேற்பார்வையில் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்