மே 5ம் தேதி உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு!
மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு.
இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் விலையேற்றத்தால் உணவுப்பொருட்களின் விலையில் ஏற்றம் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதென உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் வணிகர் சங்கர்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கான அழைப்பு அளித்து மே 5 அன்று மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்தார். வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும், வணிக சகோதரத்தை நிலைநாட்டவும் மே 5 வணிகர் தினத்தன்று உணவகங்களுக்கு விடுமுறை அளித்திட கோரிக்கை முன்வைத்தார். அதையேற்று மே 5 உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ஹோட்டல்கள் சங்கம் சார்பில் செயலாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.