ஆம்ஸ்ட்ராங் கொலை: அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி.!
சென்னை : பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை தனது வீட்டருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் கொலையான ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு உட்பட 8 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆற்காடு சுரேஷின் மரணத்திற்கு பழி தீர்க்கும் கொலையா என்ற கோணத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி இன்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னை வரும் மாயாவி அஞ்சலி செலுத்திவிட்டு லக்னோ திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, ஆர்ம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டது மிகமிக கண்டிக்கத்தக்கது. வழக்கறிஞரான அவர், தமிழ்நாட்டின் வலிமையான தலித் தலைவர், குற்றவாளிகளை ஆளும் அரசு தண்டிக்க வேண்டும் என்று மாயாவதி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.