நெல்லை நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிப்படுகொலை! நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி!
இன்று காலை 10 மணியளவில் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராகுவதற்கு நேரில் வந்த மாயாண்டி என்பவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது.
இன்று காலை 10 மணி அளவில், திருச்செந்தூர் சாலையில் உள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி என்பவர் வந்துள்ளார். இவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 4,5 பேர் அடங்கிய ஒரு கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்து காரில் தப்பி சென்ற கொலையாளிகளை போலீசார் சோதனை சாவடி ஒன்றில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர். நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் பிடிபட்டுள்ளார். தற்போது இந்த கொலை சம்பவம் தொடர்பாக நெல்லை பாளையம்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாயாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி தகவலின்படி, கொலை செய்யப்பட்ட மாயாண்டி 2023இல் கீழநத்தம் பகுதியில் ராஜாமணி என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார் என்றும், அதன் தொடர்ச்சியாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ராம கிருஷ்ணன் என்பவரும், பிறகு காரில் தப்பிச்சென்ற தங்கமகேஷ் , சிவா, மனோகர் ராஜ் ஆகியோர் சோதனை சாவடியில் கைது செய்யப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலையை நேரில் பார்த்ததாக கூறப்படும், நெல்லை வழக்கறிஞர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இன்று காலை 10 மணியளவில் நீதிமன்ற வளாகத்தின் இடதுபக்கம் 4,5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டுகிறர்கள். நான் காமராஜர் நகரில் இருந்து இன்று ஒரு வழக்கு தொடர்பாக இங்கு வந்தேன். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெறுகிறது. என்னுடன் இருதயராஜ் எனும் நபரும் இருக்கிறார். அப்போது தான் ஒரு போலீசார், ‘அங்கே ஒருத்தர் கொலை பண்ணிட்டு ஓடுறான் பிடிங்க ‘ எனக்கூறினார். அந்த நபரை நாங்கள் துரத்தி நாங்கள் பிடித்துவிட்டோம் .” என கூறினார்.
மேலும், ” இங்க ஒருத்தரை வெட்டி கொலை செய்து கொண்டு இருக்காங்கனு போலீசை கூப்பிட்டோம். ஆனால் அந்த சமயம் துப்பாக்கியுடன் எந்த போலீசும் வரவில்லை. அந்த கும்பல் கொலை செய்துவிட்டு அங்குள்ள தனியார் ஹோட்டல் முன்னாடி நின்ற காரை எடுத்துட்டு கிழக்கு நோக்கி சென்றுவிட்டனர். நாங்கள் அந்த கும்பலில் ஒருத்தரை தான் பிடித்தோம். காருக்குள்ளே எத்தனை பேர் இருக்காங்க னு பார்க்கவில்லை. ” எனக்கூறினார்.